தமிழ் - செம்மொழி
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
தமிழுக்கு நல்ல காலம் பொறக்குது
என்று குடுகுடுப்பைகாரன் சொல்வது போல அனைத்து அரசியல்வாதிகளும், தமிழ் அறிஞர்களும் இப்போது கூவிக்கொண்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சி தான் அனைவருக்கும். தமிழர்களாகிய நம் அனைவருக்குமே தமிழை செம்மொழியாக அறிவிப்புச் செய்ததில் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின்னால் நம்மில் மிகப்பலரைப் போல எனக்கும் சில வினாக்கள் எழுகின்றன.
1) தமிழ் மொழியின் செழுமையையும, தொன்மையையும் உணர்ந்து தான், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதா? அல்லது அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாகவா?
2) இதனால் ஏற்படப்போகும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அரசியல்வாதிகளும், தமிழ் அறிஞர்களும், இந்த அறிவிப்பு இல்லாமலே இக் காரியங்களைச் செய்திருக்க முடியாதா?
3) பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் ஐம்பது ஆண்டுகளில் தனித்தனியாகப் பிரிந்துவிடும் எனப் பல புள்ளி விவரங்கள் சொல்கின்றனவே? இதைச் சரிப்படுத்த இந்த அறிவிப்பால் இயலுமா?
என்னைப் பொறுத்தவரையில், முதல் கேள்விக்கு என்ன விடையாக இருந்தாலும் நான் கவலை கொள்ளப் போவதில்லை. எக்காரணமாயினும், தமிழை செம்மொழியாக அறிவித்ததை, தமிழ் மொழிக்கு ஒரு அங்கீகாரமாகவே எண்ணுகிறேன. இன்றைய நாகரிகமற்ற தமிழக அரசியல் சூழ்நிலையில், ஒரு நல்ல காரியத்திற்கு குரல் கொடுப்பதை விட, நான் தான்
செய்தேன், நான் தான் செய்தேன் என்று சுயதம்பட்டம் அடிக்கத் தான் ஆளிருக்கிறார்கள். ஆனால் செம்மொழிகள் என்று மத்திய அரசு, ஒரு பிரிவை ஏற்படுத்தியதன் மூலம் பல மொழிகளை (மேலும் பல அரசியல் நிர்ப்பந்தங்களை) எதிர்கொள்ள
தயாராகிவிட்டது என்று தெரிகிறது.
தமிழ் செம்மொழியானதால், இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கென ஒரு இருக்கை ஏற்படுத்தலாம். தமிழுக்கு லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சமஸ்கிருதம் மொழிகளைப் போல, உலக அமைப்புகளிடமிருந்து அங்கீகாரமும், நிதியுதவியும் கிடைக்கும். தமிழர்கள் அனைவரிடமும் ஒரு ஒத்த கருத்து இருந்தும், அரசியல்வாதிகளிடம் சட்டசபையிலும், நாடாளுமனறத்திலும் ஒற்றுமை இல்லாமல் போனதால், இந்த அறிவிப்பிற்காகவே நாம் நூறாண்டு காலம் போராட வேண்டி இருந்தது. இந்நிலையில் இந்த நிதியுதவியை நல்ல வழியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டியது நம் கடமை.
நான் தமிழ்மொழியை, தமிழ் எனற ஒரு பாடத்தின் மூலமாக பள்ளியில் மட்டுமே படித்தவன். இனறு ஐரோப்பாவில் மேற்படிப்பிற்காக வந்தபிறகு தமிழில் பேசுவதும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பேச்சுத் தமிழில் பிற மொழி (குறிப்பாக ஆங்கில) தாக்கத்தை என்னால் நன்றாகவே உணரமுடிகிறது. இது தொடர்ந்தால் நான் எழுப்பிய அந்த
மூன்றாவது வினா, நனவாகிவிடுமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. தமிழ் செம்மொழி அறிவிப்பால், பேச்சுத் தமிழுக்கு என்ன பயன் எனறு கூறுவார் யாரும் இங்கே இல்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கில் ஊடகங்களின் பாதிப்பே அதிகமாக இருக்கின்றது (குறிப்பாக மின்னணு ஊடகங்கள்). இன்றைய காலகட்டத்தில், இந்த ஊடகங்கள், பேச்சுத் தமிழ் வளர்ச்சிக்கு
எதிர்மறையாக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கக்கூடிய விடயம். இவ்விடயத்தில் அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், ஊடகவியலார்கள் மற்றும் பாமரர்கள் ஒன்று சேர்ந்து பேச்சுத் தமிழைக் காப்பது நம் கடமை.
எது எப்படியோ, தமிழ் செம்மொழியாக ஆனது. இது தமிழ் மொழியின் வளர்ச்சியில் மேலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தால் அதுவே உண்மையான வெற்றியாகும்.
0 Comments:
Post a Comment
<< Home