சுனாமி நிதி - டிரெஸ்டனில் இசை நிகழ்ச்சி
இன்று டிரெஸ்டன் பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்ட ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியர்கள் தனியாக நிதி திரட்டி இந்திய செஞ்சிலுவைச்சங்கத்திடம் அளித்திருந்தாலும் இம்முறை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி.
சரியாக இரவு 7.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. டோரின் செய்டோவ்ஸ்கி பெளஸ்ட் (இதை வாசிக்கும் போது வாய் சுளுக்கினால் நான் பொறுப்பல்ல) என்ற ஜெர்மன் பெண்மனி தாகூர் கீர்த்தனைகள் பாடினார். மரியோ பெளஸ்ட் சிதார் வாசிக்க, சிங்கப்பூரில் பிறந்து தற்போது பெர்லினில் வசிக்கும் ரவி சீனிவாசன் தபேலா வாசித்தார். இவர்கள் கடைசியாக இந்துஸ்தானியையும் மேற்கத்திய இசையையும் இணைத்து இசைக்க அதுவே நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.
8.00 மணிக்கு சிறிய இடைவேளை. இங்குள்ள இந்திய உணவகம் கடை விரித்திரிந்தார்கள். 5 நிமிடத்தில் மாங்கோ லஸ்ஸியைத் தவிர அனைத்துமே காலியாயிருந்தது.
8.30 மணிக்கு புதுதில்லியிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சுபேந்து கோஷ் வட இந்திய இசையும், தென்னிந்திய கர்நாடக இசையையும் இசைத்தார். பல நாட்டை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 400 முதல் 500 பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
சொல்ல மறந்துட்டேனே. இடைவேளையின் போது உண்டியல் குலுக்கினோம். மேலும் அரங்கிற்கு வெளியேயும் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. கணிசமான உதவி கிடைத்தது.
விரைவில் இப்பணம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.
0 Comments:
Post a Comment
<< Home