வரவர எனக்கு இந்த கிரிக்கெட் மீது கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டின் மேல் தீராத வெறி கொண்டு அலைந்தவன் தான் நானும். கடந்த சில வருடங்களாக என் வெறுப்பு அதிகரிக்க பல காரணங்கள். அதில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.
கிரிக்கெட் உடற்தகுதியில்லாதவர்களின் விளையாட்டாகவே எனக்கு தோன்றுகிறது. பத்துமாச கர்ப்பம் போல தொப்பை வைத்துக் கொண்டு விளையாடும் வீரர்களை எல்லோரும் நன்கு அறிவீர்கள். அதிலும் சிலர் உலகின் தலைசிறந்த வீரர்களாவர். வேறு எந்த ஒரு விளையாட்டிலும் இந்நிலை உண்டா? ஐந்து நாள் ஆட்டங்களில் தொடர்ந்து ஓடுகிறார்களே, இதற்கும் ஒரு உடற்தகுதி வேண்டுமல்லவா? எனச்சிலர் இடித்துரைப்பார்கள். ஓடுகிறார்கள் தான். ஆனால் இவர்களை தொடர்ந்து ஐந்து கிலோமீட்டர் ஓடச் சொல்லுங்கள் பார்ப்போம்.
சினிமாவைப் போல, இங்கேயும் தனிநபர் ஆராதனை. ஆனால் சினிமாவை விட சற்றே குறைவு. ஒரு நாள் ஆட்டமாக இருந்தால் ஒரு நாள் வேலை போச்சு. ஐந்து நாள் ஆட்டமாக இருந்தால் ஐந்து நாள் வேலை போச்சு. இந்திய அணி கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம், பல அலுவலகங்கள், கல்லுாரிகளின் நிலை இது தான். கிரிக்கெட் போட்டி நடக்கும் போதெல்லாம், இந்திய அலுவலகங்களின் உற்பத்தித் திறன் குறைவதாக பல ஆய்வறிக்கைகள் வந்துள்ளதே இதற்கு சான்று.
சரி. முடிந்தால் உங்கள் கருத்துக்களை பின்னுாட்டத்தில் எழுதுங்கள். மேலும் சில விவரங்களை அடுத்த பதிவில் எழுத முடியுமான்னு பார்க்கிறேன்.